கதிரவ மறைப்பு

நம் சூரியமண்டலத்தின் மையத்திலுள்ள சூரியனை, 8 கோள்களுடன் அதனதன் உபகோள்களும் குறள்கோள்கள், வால்நட்சத்திரங்கள், செய்மதிகள் போன்ற ஏராளமான இயற்கை செயற்கை வான்பொருட்கள் ஓயாமல் சுற்றிக்கொண்டிருக்கின்றன.

நாம் வாழும் பூமிக்கிரகத்தின் ஒரேயொரு உபகோள் சந்திரன். சந்திரன் பூமியை சுற்றிக்கொண்டே பூமியுடன் சேர்த்து சூரியனையும் சுற்றி வந்து கொண்டிருக்கின்றது. இதன்போது சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும்போது, சந்திரனின் நிழல் பூமியின் மீது விழும். அப்போது அந்நிழல் விழும் பிரதேசத்தில் கதிரவன் முழுமையாகவோ, பகுதியாகவோ மறைக்கப்பட்டிருக்கும், இதுவே கதிரவமறைப்பு அல்லது சூரியகிரகணம் எனப்படும். இத்தோற்றப்பாடு சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் அமையும் அமாவாசை தினங்களில் மட்டுமே நடைபெறும். மேலும் புவிச்சுற்றுகை காரணமாக இந்த தோற்றப்பாடு 8 நிமிடங்களிற்கு மேல் நிலைக்காது

சந்திரன் பூமியை ஒருமுறை வலம்வர 27நாட்கள் எடுக்கும். ஆகவே 27 நாட்களுக்கு ஒருமுறை கதிரவ மறைப்பு நிகழ வேண்டும், ஆயினும் நிலவினது சுற்றுப்பாதை பூமியின் சுற்றுப்பாதையை விட அண்ணளவாக 5°அளவிற்கு சரிவாக இருப்பதால் பெரும்பாலான சமயங்களில் சந்திரனின் நிழல் பூமியின் மீது விழுவதில்லை

சூரியனை போல் சந்திரனும் பூமியின் வடவரைக்கோளத்திலும் தென்னரைக்கோளத்திலும் பயணம் செய்யும். இதன் ஒரு சுற்றை சந்திரன் முடிக்க 27.212220நாட்கள் எடுக்கும், இது வானியலில் draconic month எனப்படும், இத்தனை நாட்களுக்கு ஒருமுறையே பூமியின் பயணத் தளத்தை சந்திரனின் பயணப்பாதை சந்திக்கும். மேலும் நிலவு பூமியை முழுவதுமாக ஒருமுறை சுற்றிமுடிக்க 29.530587981நாட்கள் எடுக்கும், இது ஒரு சந்திர மாதம் எனப்படும். இத்தனை நாட்களுக்கு ஒருமுறையே சந்திரனானது சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் பிரவேசிக்கும். இவ்விரண்டு நிகழ்வுகளும் ஒருசேர நடக்கும் தருணத்தில் மாத்திரமே சூரியகிரகணம் நிகழலாம். ஆகவே ஒரு வருடத்தில் ஐந்து தரங்களிற்கு மேல் கதிரவமறைப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

கதிரவமறைப்பு 4 வகைப்படும்
[ ] முழுக் கதிரவமறைப்பு;
இதன்போது சந்திரனால் கதிரவன் முழுவதுமாக மறைக்கப்படும். பூமிக்கும் சந்திரனுக்குமிடையிலான தூரத்தின் 400மடங்கு தூரத்தில் பூமியிலிருந்து சந்திரன் அமைந்துள்ளது, அத்துடன் சூரியனின் குறுக்கு விட்டமானது சந்திரனின் குறுக்கு விட்டத்தின் 400மடங்கு ஆகும்.

இவ்விகிதங்கள் ஏறத்தாழ சமனாவதால் சூரியனின் தோற்ற அளவுக்கும் சந்திரனின் தோற்ற அளவுக்கும் இடையிலான விகிதம் 1 அல்லது 1 இலும் அதிகமாக சில சமயங்களில் அமையும். இந்த நேரங்களில் சூரியனானது சந்திரனால் முழுவதுமாக மறைக்கப்பட்டு இருளான பிரதேசமொன்று உருவாகும்.

[ ] வளைய கதிரவமறைப்பு
பூமி சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றுவது போலவே நிலவு பூமியை சுற்றும் பாதையும் சற்று நீள்வட்டமாகவே அமையும், இதனால் சூரியனின் தோற்ற அளவுக்கும் சந்திரனின் தோற்ற அளவுக்கும் இடையிலான விகிதம் 1 இலும் குறைவான சந்தர்ப்பங்கள் ஏற்படும்.
இதன்போது சந்திரனின் பின்னணியில் சூரியன் ஓர் ஒளிவளையம் போல் காணப்படும்.

[ ] கலப்புக் கதிரவமறைப்பு
பூமியிலிருந்து அவதானிக்கும் பிரதேசத்திற்கேற்ப சில இடங்களில் முழுக் கதிரவமறைப்பும், சில இடங்களில் வளையக் கதிரவமறைப்பும் தோன்றுதல் கலப்புக் கதிரவமறைப்பு எனப்படும். இது மிகமிக அரிதாகவே ஏற்படும்.

[ ] பகுதிக் கதிரவமறைப்பு
சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைக்காமல் ஒரு சிறு பகுதியினூடாக ஊடுறுத்துச் செல்லும் நிலமை பகுதிக் கதிரவமறைப்பு எனப்படும்.

சில வேளைகளில் முழு, வளைய கதிரவமறைப்பின் இருள் பிரதேசம் தவிர்ந்த பிரதேசங்களில் கிரகணம் பகுதிக் கிரகணமாகவே அவதானிக்கப்படும்.

சூரியன் சந்திரன் பூமி ஆகியன ஒரே சரியான நேர்கோட்டில் அமையாதபோதும் பகுதிக் கதிரவமறைப்பு ஏற்படும். இது பூமியின் எப்பகுதியிலும் பகுதிக் கதிரவமறைப்பாகவே அமையும்.

This image has an empty alt attribute; its file name is image-4.png

முழு, பகுதி, கலப்புக் கதிரவமறைப்புகளின் போது உச்சகட்ட மறைப்பு நிலைக்கு சற்று முன்பாகவும், சற்று பின்பாகவும் வைரமோதிர நிலை (Diamond ring effect) ஏற்படும். இதன்போது கதிரவ வளையத்தில் குறிப்பிட்டதொரு முனை மிகவும் பிரகாசமாக அமையும். இது பார்வைக்கு வைரமோதிரம் போல் தென்படும். இந்நிகழ்வை வெறுங்கண்களால் அவதானிப்பது ஆபத்தானது. இந்த பிரகாசமான முனையிலிருந்து மிக அடர்த்தியுடன் கட்புல, கட்புலனாகா கதிர்கள் வெளியேறும். கண்களிலுள்ள ஒளி உணரிகளுக்கு இவை ஆபத்தானவை. இதனால் நிரந்தர கண் குறைபாடுகள் ஏற்படலாம்.

This image has an empty alt attribute; its file name is image-5.png

எதிர்வரும் மார்கழி 26ம் திகதயன்று இலங்கையின் சில இடங்களிலிருந்து அவதானிக்கக்கூடிய வளையக் கதிரவமறைப்பு ஒன்று ஏற்படவுள்ளது. மேலும் இந்த கதிரவமறைப்பை சவுதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு இராட்சியம், ஓமான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், வடக்கு மரியானா தீவுகள் மற்றும் குவாம் தீவிலிருந்தும் அவதானிக்கக்கூடியவாறு அமையும்.

This image has an empty alt attribute; its file name is image-6.png

இலங்கையில் இக்கருநிழல் வலயம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை பிரதேசங்களினூடு ஊடுறுத்துச்செல்கின்றது. கிறீன்விச் நேரப்படி 05:18:53 இற்கு ஆரம்பமாகும் இக் கதிரவமறைப்பு 220 செக்கன்கள் (3M 40s) நிலைக்கும்.

இதன்போது சூரியனின் தோற்ற அளவுக்கும் சந்திரனின் தோற்ற அளவுக்கும் இடையிலான விகிதம் 0.96 ஆகவும், நிழல் அகலம் 164km ஆகவும் அமையும். மேலும் சந்திரனின் நிழல் செக்கனுக்கு 1.1km (1.1km/s) எனும் வேகத்தில் பூமியை கடந்து செல்லும்.

உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் இந்நிகழ்வை அவதானிப்பதன் மூலம் நம் பிரபஞ்சம் தொடர்பான நிறைய உண்மைகளை அறிந்துகொள்ளலாம்.
கதிரவமறைப்பு தொடர்பான சுவாரசியமான தொடக்க அறிவை பெற்றிருப்பீர்கள் என நம்புகிறேன்.

S.கிளீற்றஸ் சேவியர்
விஞ்ஞான பீடம்
கொழும்பு பல்கலைக்கழகம்